ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வீட்டுக்காவலில் உள்ள ஆங் சான் சூகி மீது 11 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆங் சான் சூகி மீதான வழக்குகளை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளைத் தூண்டியதற்காகவும், தேர்தல் பிரச்சாரத்தின் மீது கரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இறுதியில் மியான்மரின் இராணுவ தலைமை அவருக்கு கொடுத்த நான்காண்டு தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்தது.
அதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தது மற்றும் சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளை வைத்திருந்தது ஆகியவற்றுக்காகவும், கரோனா கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பான இன்னொரு வழக்கிலும் ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.