இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
மத்திய கிழக்கின் அரேபிய கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களை தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.
ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா இதேபோன்று பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாக இந்திய கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து மங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கேம் ப்ளூட்டோ என்ற அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் அந்த கப்பல் பழுதடைந்தது. இந்திய கடற்படை மற்றும் கோஸ்ட் கார்ட் கப்பல்கள் இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.