
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருதரப்பும் மோதி வரும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை மீட்ட அரசு சாரா அமைப்பினர் இது குறித்து தங்களது வேதனையைப் பதிவு செய்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்த சூப்பர் நோவா இசை நிகழ்ச்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட புத்தர் சிலையின் கீழ் நடனமாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 'அமைதிக்கான இசை நிகழ்ச்சி' என்று நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் குடிமக்களைத் தவிர வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டார்கள். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே சிறு விமானம் போன்ற கருவிகள் மூலமாக ஹமாஸ் குழுவினர் எல்லையைக் கடந்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் இறங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றனர் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.