Skip to main content

கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதாக செலுத்தினாலும் கூடுதல் கட்டணம் கிடையாது!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக கொண்டுவந்துள்ள கேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை முதலில் அறிமுகப்படுத்தினார் . அதன்பின் ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு சேவையை அறிமுகப்படுத்தினார். 

 

apple introduced new credit card

 

ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும் இந்த‌ கிரெடிட் கார்டினை 'ஆப்பிள் பே' பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம் என அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் கார்டு கொண்டு பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மேலும் இந்த ஆப்பிள் கார்டில் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. இத்தகைய தகவல்கள் அனைத்தும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும். இதுதவிர ஆப்பிள் கார்டு‌ மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் 2 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
 

அதுமட்டுமின்றி கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இன்னும் இந்த வசதி கொண்டுவரப்படவில்லை. விரைவில் இந்திய பயனாளர்களும் இந்த வசதியை பெறலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவிலும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்