கரோனா வைரஸ் சுகாதார, ஆரோக்கிய நெருக்கடி சார்ந்த விஷயம் என்றாலும் அதன் தாக்கம் மேலும் சிலபல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ கடந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் காரணமாகப் பல்வேறு விளைவுகள் ஏற்படலாம் என அந்தோனியோ கட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலுடன் பேசிய அவர், கரோனா வைரஸ் சுகாதார, ஆரோக்கிய நெருக்கடி சார்ந்த விஷயம் என்றாலும் அதன் தாக்கம் மேலும் சிலபல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அவை,
1. நோயை அரசுகள் சரியாகக் கையாளவில்லை, அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குடிமக்கள் நினைத்தார்களேயானால், பொது ஸ்தாபனங்கள் மீது மக்களுக்கு பெரிய நம்பிக்கையின்மை ஏற்படும்.
2. கரோனாவினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி பலவீனமான நாடுகளில், வளர்ச்சி குறைந்த அல்லது வளரும் நிலைக்கு மாறும் சூழலில் உள்ள நாடுகளில் பொருளாதாரத்தினால் பதற்ற நிலை உருவாகும். இது பெரும்பாலும் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களின் மனநிலையைக் கடுமையாக பாதிக்கலாம்.
3. தேர்தல்களைத் தள்ளி வைப்பது, அல்லது அவசரமாக வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்வது இந்தக் காலக்கட்டத்தில் அரசியல் பதற்றங்களை உருவாக்கும். இதனால் இம்முறையில் நியாயத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.
4. கரோனாவால் சமூக, பொருளாதார, சுகாதாரச் சூழல்களில் ஏற்படும் நிலையற்றத்தன்மை குழப்பங்களை விளைவித்து வன்முறைகள் தலைவிரித்தாடும் சூழல் ஏற்படலாம். இது கோவிட்-19க்கு எதிரான போரை சிக்கலாக்கிவிடும்.
5. பயங்கரவாதம் என்ற அச்சுறுத்தல் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. கரோனா மீது அனைத்து அரசுகளும் கவனம் செலுத்தும் வேளையில் பயங்கரவாதிகள் இதனைத் தங்கள் தாக்குதலுக்கான வாய்ப்பாகப் பார்க்கும் அபாயம் உள்ளது.
6. கரோனாவுக்கு எதிரான திட்டமிடலிலும், மருத்துவத்திலும் வெளிப்பட்டுள்ள பலவீனங்கள், எதிர்காலத்தில் உயிரி பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாளரமாக அமைந்து விடக்கூடிய அபாயமுள்ளது. பயங்கரவாதிகள் விஷக் கிருமிகளை உலகம் முழுதும் பரவச்செய்யும் வாய்ப்பை இது உருவாக்கிவிடும்.
7. இந்த நெருக்கடியான சூழல், நாடுகளிடையே, சமூகங்களிடையே, பண்பாடுகளுக்கிடையே இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் பிராந்திய, தேசிய, சர்வதேச தீர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தலாம். மேலும் பல நம்பிக்கை சார்ந்த நடைமுறைகளையும் கோவிட்-19 தகர்த்து வருகிறது.
8. இந்தத் தொற்று நோய் பல்வேறு மனித உரிமைகள் மீதான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துள்ளன. சமூக விரோதம், துவேஷப் பேச்சு, வெறுப்புணர்வு ஆகியவற்றுடன் இன மற்றும் நிற பாகுபாடு ஆகியவற்றை கொண்டு அடிப்படைவாத கும்பல்கள் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த பார்க்கின்றன. பல விஷயங்களில் அரசுகள் பாகுபாட்டுடனும் பாரபட்சத்துடனும் நடப்பதைப் பார்க்கிறோம். மேலும், எதேச்சதிகாரமும் வளர்ந்து வருகிறது. ஊடகங்கள் வாயை அடைப்பது, மற்றும் பேச்சுரிமை, கருத்துரிமை நிராகரிக்கப்படுவது ஆகியவையும் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.