இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கி குண்டு டிரம்பின் வலது காதை கிழித்து சென்றது. இதனால், அவர் நூலிழையில் உயிர் தப்பினார். டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மேத்யூ என்ற இளைஞரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டத்திக் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பின் உத்தரவால், அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்குவதாக டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி செய்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.