அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று (19.11.2021) தனது வழக்கமான மருத்துவ பரிசோதனையை செய்துகொண்டார். அப்போது அவருக்கு இரத்தம், இரைப்பை குடல், பல், பார்வை மற்றும் நரம்பியல் சம்மந்தமான பரிசோதனைகள் நடைபெற்றது.
இந்தநிலையில், ஜோ பைடனை பரிசோதித்த மருத்துவர், ஜோ பைடன் ஆரோக்கியமாகவும், அதிபருக்கான பணியை வெற்றிகரமாக செய்ய தகுதியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேநேரத்தில் வயதாவதற்கான சில அறிகுறிகளை பைடன் வெளிப்படுத்தியதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறப்பாக உணருவதாக ஜோ பைடன் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பைடன் எதுவும் மாறவில்லை, தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாட ஆவலோடு இருப்பதாக விளையாட்டாக கூறியதாகவும் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
79 வயதான ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதாக அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றபோது, அவர் மயக்க மருந்தின் மூலமாக மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டார். இதனையடுத்து ஜோ பைடன் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 1.25 மணி நேரம் அதிபராக செயல்பட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது.