இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. கரோனா உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக கருதப்படுகிறது. அதேசமயம், வளர்ந்த நாடுகள் தடுப்பூசியைப் பதுக்குவதாகவும், ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைப்பது போராட்டமாக இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் வளர்ந்த நாடுகளில் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை நீக்க வேண்டுமென உலக வர்த்தக மையத்தில் கோரிக்கை எழுப்பியுள்ளன. காப்புரிமை நீக்கப்பட்டால், தடுப்பூசிகளைக் கண்டுபிடித்த நிறுவனங்கள் மட்டுமின்றி, உலகமெங்கும் உள்ள பிற மருந்து நிறுவனங்களும் தடுப்பூசியைத் தயாரிக்க முடியும். மேலும், இதனால் தடுப்பூசி உற்பத்தியும் அதிகரிக்கும். ஆனால், இந்த முடிவுக்கு மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்காவின் கோரிக்கைக்கு ஜோ பைடன் நிர்வாகம் ஆதரவு அளித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி, கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, தடுப்பூசி காப்புரிமையை நீக்க அமெரிக்கா ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து, "இது உலக அளவிலான சுகாதார நெருக்கடி. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளுக்கு, அசாதாரணமான நடவடிக்கை தேவைப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை நீக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து, தடுப்பூசிக்கான காப்புரிமை நீக்கப்படுவதில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அமெரிக்கா ஆதரவு தெரிவித்ததால், உலக சுகாதார மையம், கரோனா தடுப்பூசி காப்புரிமையை விரைவில் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அமெரிக்கா ஆதரவு தெரிவித்ததை வரலாற்று முடிவு என்றதோடு, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான தருணம் என கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவினை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகமும் வரவேற்று உள்ளன.