Skip to main content

உச்சகட்ட பதற்றம்: தயார்நிலையில் அமெரிக்க வீரர்கள்; ஆபத்தான பகுதிக்கு வீரர்களை அனுப்பிய உக்ரைன்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

ukraine

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து, அதை தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என கூறி வருகிறது. ஆனால் இதனை மற்ற நாடுகள் நம்பவில்லை. உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

 

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என நம்புவதாகவும், உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யர்கள் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திப்பார்கள்" எனவும் தெரிவித்தார். இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள தங்கள் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை பிரிட்டன் திரும்ப அழைத்துள்ளது. தூதரகத்தில் பணியாற்றும் பாதி ஊழியர்கள் நாட்டிற்கு திரும்புவார்கள் என பிரிட்டன் கூறியுள்ளது. அதேபோல் அமெரிக்கா, எந்த நேரத்திலும் படையெடுப்பு நிகழலாம் என கூறி, தனது தூதரக ஊழியர்களின் உறவினர்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே டென்மார்க், ஸ்பெயின், பல்கேரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நேட்டோ நாடுகள், உக்ரைனை பாதுகாக்கும் விதமாக கிழக்கு ஐரோப்பாவிற்கு போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. அமெரிக்காவும் உக்ரைனுக்கு  600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பியுள்ளது.

 

மேலும் தற்போது அமரிக்கா, 8,500 வீரர்களை தயார்நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே உக்ரைன் நாடு, தனது படைகளை ஆபத்தான செர்னோபில் பகுதிக்கு அனுப்பியுள்ளது. 1986 ஆம் ஆண்டு  செர்னோபில் பகுதியில் உலகின் மோசமான அணு விபத்து நடைபெற்றது. அங்கு அமைந்திருந்த அணு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஏற்பட்ட கதிர்வீச்சு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்தது. இதனையடுத்து அந்த விபத்து நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள 35 கிலோமீட்டர் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதி, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ தகுதியற்றதாகவே இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வாறான ஆபத்து மிகுந்த பகுதிக்கு உக்ரைன் தனது படைகளை அனுப்பியுள்ளது. ரஷ்யாவிலிருந்து உக்ரைன் தலைநகர் கீவிற்கு வர செர்னோபில் குறைவான தூரம் கொண்ட வழி என்பதால், அந்த பகுதி வழியாக ரஷ்யா ஊடுருவ வாய்ப்புள்ளதால், அந்த பகுதிக்கு உக்ரைன் தனது படைகளை அனுப்பியுள்ளது.

 

செர்னோபிலுக்கு சென்றுள்ள உக்ரைன் படைகள், ஆயுதங்களோடு, கதிர்வீச்சை அளவிடும் கருவியையும் பாதுகாப்பிற்காக கொண்டு சென்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்