மியான்மர் நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், போராடும் மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை மியான்மர் இராணுவம் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுவும் தோன்றியுள்ளது. இந்தநிலையில் மியான்மரில் ஒரு கிராமத்தில் புகுந்த மியான்மர் ராணுவம், 11 பொதுமக்களின் கைகளை கட்டி அவர்களை உயிரோடு எரித்ததாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எரிக்கப்பட்டவர்களில் பதின்ம வயதினரும் அடங்குவர் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவம், இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் அதை சர்வதேச ஊடகங்களால் இதுவரை உறுதி செய்யமுடியவில்லை.
இந்தநிலையில் மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ், "வடமேற்கு பர்மாவில் (மியான்மரில்) குழந்தைகள் உட்பட 11 கிராம மக்களை பர்மிய (மியான்மர்) ராணுவம் கட்டிவைத்து உயிருடன் எரித்ததாக நம்பத்தகுந்த மற்றும் வேதனையளிக்கும் தகவல்களால் நாங்கள் கோபமடைந்துள்ளோம்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், தடுப்புக்காவலில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மியான்மர் இராணுவத்தை வலியுறுத்தியுள்ளார்.