உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனா அலைக்கு ஒமிக்ரான் பரவல் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த செவ்வாய் கிழமை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அமெரிக்காவில் தினசரி இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுமார் 60,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர், அமெரிக்காவில் ஒமிக்ரான் அலை ஜனவரி மாத இறுதியில் உச்சத்தை தொடும் என கூறிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனிலும் கரோனா அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நேற்று ஒரேநாளில் பிரிட்டனில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 37 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
பிரான்ஸ் நாட்டிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்தநாட்டில் முதல்முறையாக நேற்று தினசரி கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் நொடிக்கு இருவர் கரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இதற்கு முன் இருந்ததில்லை எனவும் பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டா வகை கரோனாவால் மருத்துவமனைகளில் நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும், ஒமிக்ரான் இனிதான் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்றும் ஆலிவர் வேரன் கூறியுள்ளார்.