![mosque](http://image.nakkheeran.in/cdn/farfuture/t__EgC7zZ6rHXlRizXPZWxN2hyhUDADmvP2-5LtRFW4/1633697662/sites/default/files/inline-images/fdvre.jpg)
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில், ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து மசூதி ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 100ஐ தாண்டும் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை வழிபடும் போது இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், மசூதியில் வழிபாடு செய்ய வந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இறந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தலிபான்களின் சிறப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தனது தாக்குதலை அதிகரித்துள்ள ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு, கடந்த காலங்களில் ஷியா இஸ்லாமியர்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.