இந்த நிலையில், ஆப்கானை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் நகரப் பேருந்துகளுக்கு முண்டியடிப்பது போல் பலர் விமானத்தில் ஏற முயற்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சில சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் வெளியான ஒரு வீடியோவில், விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடி நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற இருவர் நடுவானிலிருந்து கீழே விழும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
காபூலில் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க முடியாத மக்கள் விமானத்தைப் பின் தொடர்ந்தனர். இதில், இருவர் விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த இருவர், வானிலிருந்து கீழ் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உலக மக்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
இதே போன்று, மற்றொரு விமானத்தின் மீது பேருந்தில் அமர்வது போல் விமானத்தின் மேல் கூரையில் மக்கள் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாய் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தலைநகரில் உள்ள காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் பார்வை ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியுள்ள போதும், தங்களைக் காக்க எந்த நாட்டினராவது உதவ மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆப்கான் மக்கள்.