வரும் செவ்வாய்க்கிழமை அதாவது நாளை உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையானது 800 கோடியைத் தொடும் என ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவென்றால், அடுத்த வருடம், உலக மக்கள் தொகையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்கிற வகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைக் கைப்பற்ற இருக்கிறது இந்தியா என்பதுதான்.
இது தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், 2030ல் உலக மக்கள் தொகை 850 கோடியை எட்டும் எனவும், 2050 ஆம் ஆண்டு வரை 8 நாடுகள் மக்கள் தொகை அதிகரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எட்டு நாடுகள் பட்டியலில் இந்தியா, காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, பாகிஸ்தான், தான்சானியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதனால் 2050 ஆம் ஆண்டு 970 கோடியாகவும், 2080 ஆம் ஆண்டு 1,040 கோடியாகவும் உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது ஐ.நா.