ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.