மெக்ஸிகோவை சேர்ந்தவர் ப்ளான்சா அரெல்லானா. 51 வயதான இவர் பெருவை சேர்ந்த 37 வயதான ஜான் பாப்லோவை ஆன்லைன் டேட்டிங் செயலியில் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் ஜூலை மாதத்தின் இறுதியில், பெரு நாட்டின் லிமா நகருக்குச் செல்ல இருப்பதாகத் தனது உறவினர்களுடன் கூறியுள்ளார். அங்கு தான் காதலித்து வந்த ஜான் பாப்லோவை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
3000 மைல்கள் பயணம் செய்து ஜான் பாப்லோ தங்கியிருந்த கடற்கரை நகரமான ஹுவாசோ சென்றுள்ளார். ப்ளான்சா தனது உறவினரிடம் கடைசியாகப் பேசிய தொலைப்பேசி அழைப்பில் கூட ஆன்லைன் மூலம் கிடைத்த உறவினால்தான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல நவம்பர் 7ம் தேதிக்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு ஏதும் வராததால் ப்ளான்சாவிற்கு என்ன நடந்ததோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் ப்ளான்சா ட்விட்டரில் உதவி கேட்டது அவரது குடும்பத்தாரை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. ப்ளான்சாவை மீட்க அவரது உறவினர்கள் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து பெரு நாட்டு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். நவம்பர் 10ம் தேதி அன்று ஹுவாசோ கடற்கரையில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட விரல் ஒன்று இருந்துள்ளது. விரலில் சில்வர் மோதிரமும் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் உடலில் உள்ளுறுப்புகள் எதுவுமின்றி உடல் அதே கடற்கரையில் இருந்துள்ளது. மேலும் இறந்தது ப்ளான்சா என்பதை அவரின் விரலிலிருந்த மோதிரத்தைக் கொண்டு கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து ஜான் பாப்லோ, உடலுறுப்புகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பாப்லோ மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர் என்று தெரிய வந்தது. ப்ளான்சா இறந்த இரண்டு நாள் கழித்து தனது டிக் டாக் பதிவில் மனித உறுப்புகளை வைத்து பதிவிட்டிருந்தார். மேலும் அவரது வீடு முழுக்க ரத்தத் துளிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.