மலேசியாவில் எந்தவித ஆவணங்களுமின்றி பணியாற்றி வந்த 4000த்திற்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்களை விரைவாக நாடுகடத்த மலேசிய குடிவரவுத்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள அனைவரும் ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும் முன்னர் (மே15) இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
அவர்களின் பயணச்செலவுகளை அவரவர் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் முன்னதாகவே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் முஸ்தபர் பின் ஹஜி அலி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் முறையான ஆவணங்களின்றி பணியாற்றும் இந்தோனேசியர்களை குறைக்க இருநாட்டு அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாக பேசியுள்ள இயக்குநர் ஜெனரல் முஸ்தபர், “சட்டத்தின் அடிப்படையில் இப்படி பணியாற்றும் தொழிலாளர்கள சிறைத்தண்டனைக்கும் நாடுகடத்தலுக்கும் உள்ளாவார்கள். அவர்களாகவே முன்வந்து ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் குறைவான அபராதத்துடன் விரைவாக இந்தோனேசியா அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் ரம்ஜான் நோன்புக்கு முன்னதாக அனுப்பி வைக்க முயற்சிக்கிறோம்” என்றார்.
விசா காலம் முடிவடைந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான இந்தோனேசியர்கள் மலேசியாவில் வசிப்பதாகக் கூறியுள்ளார். இந்தோனேசிய இயக்குநர் ஜெனரல் ரோனி சோம்பி. “சட்டவிரோதமாக பணியாற்றும் முறைக்கு இவ்வாறான இந்தோனேசியர்கள் பலிகடா ஆகின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் சோம்பி.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது கடந்த ஆண்டு முதல் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் அங்கமாக இவ்வாறான நாடுகடத்தல் நடவடிக்கைகளை மலேசிய குடிவரவுத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.