
கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே கொழை சாவடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் சண்முகவேல் (வயது 35). இவர் ராசிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு விழுப்புரம் ஜனகராஜ் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் குமார் (வயது 45) என்பவருடன் ராசிக்கல் விற்பனையின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் சண்முகவேல், குமாருக்கு ரூ.23 லட்சம் தர வேண்டி இருந்தது. ஆனால் மொத்த பணத்தையும் சண்முகவேலால் கொடுக்க முடியவில்லை. இதனால் தனக்கு சொந்தமான 23 சென்ட் இடத்தை குமாருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டார். பணத்தை திரும்ப கொடுக்கும் போது நிலத்தை திரும்ப எனக்கு எழுதி கொடுக்க வேண்டும் என சண்முகவேல் கூறியுள்ளார். அதற்கு குமாரும் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி முழு பணமும் தன்னிடம் உள்ளது. நிலத்தை கிரயம் செய்து கொடு என்று சண்முகவேல், குமாரிடம் கூறி ஸ்ரீமுஷ்ணம் கடைவீதிக்கு வரவழைத்துள்ளார். கடைவீதியில் உள்ள ஒரு கடையில் இரு தரப்பினரும் சந்தித்துள்ளனர். அதன் பின்னர் சண்முகவேல் தான் கொண்டு வந்த ரூ.22 லட்சத்து 25 ஆயிரத்தை குமார் முன்பு எண்ணி காண்பித்துள்ளார். மீதி பணம் எங்கே என குமார் கேட்டுள்ளார். மீதி ரூ. 70 ஆயிரத்தை குமாரின் நண்பர் கேசவன் என்பவருக்கு ஜி பே மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறி நம்ப வைத்துள்ளார். கிரையம் செய்து கொடுத்துவிட்டு இங்கே வந்து பணத்தை பெற்றுக்கொள். அதுவரை எனது ஊர்காரர்கள் இந்த பணத்தை வைத்திருப்பார்கள் என குமாரிடம் சண்முகவேல் கூறியுள்ளார்.
இதன் பின்னர் குமாரை ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சண்முகவேல் அழைத்து சென்றார் அங்கு சண்முவேல் கூறியபடி கிருஷ்ணன் மகன் அசோக்குமார் என்பவருக்கு குமார் அந்த இடத்தை பதிவு செய்து கொடுத்தார். பின்னர் பணத்தை பெறுவதற்காக ஏற்கனவே சந்தித்த கடைக்கு வந்த போது குமாரிடம் பணத்தை கொடுக்காமல் சண்முகவேல் மற்றும் அவருடன் வந்தவர்கள் ரூ. 22 லட்சத்து 25 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட னர். இதனால் அதிர்ச்சியடைந்த குமார் அலறினார். இது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் குமார் புகார் செய்தார். இது தொடர்பாக ஏழு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினார்.
இதில் தொடர்புடைய ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அசோக் குமார் (வயது 29),முத்தையன் மகன் ஆனந்தன் (வயது 38), சேத்தியாதோப்பு அள்ளுர் மணி மகன் வெங்கடேசன் (வயது 39), ஸ்ரீமுஷ்ணம் தண்ட பாணி மகன் பிரபாகரன் (வயது 28) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். பணத்துடன் தப்பி ஓடிய சண்முகவேல் மற்றும் சிலரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில் ரூ.22 லட்சத்து 25 ஆயிரத்தை நண்பரிடம் இருந்து பறித்துக்கொண்டு ராசிக்கல் வியாபாரி தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.