/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/matha444.jpg)
ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தலைமறைவான அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரியில் ஒருவீட்டில் பப்ஜி மதன் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில், சைபர் க்ரைம் தனிப்படை போலீசார் அங்கு சென்று மதனை கைது செய்து, செய்தனர். அப்போது போலீசில் சிக்கிய உடன், ‘நான் செய்தது தவறு’ என போலீசார் காலில் விழுந்து மதன் அழுது கெஞ்சியதாகவும், அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மதன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 509, 294 பி உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்ஃபோன், லேப்டாப் ஆகியவைகளை கொண்டு மதனுக்கு உதவிய அவரது தோழிகளை பிடிக்கவும் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ரூபாய் 4 கோடி பணம் உள்ள பப்ஜி மதனின் வங்கிக் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். அதேபோல் மதன் யூ- டியூப் மூலம் ஆபாசமாக பேசி சம்பாதித்த பணம் வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆடி கார்கள், மூன்று லேப்டாப்கள், செல்போன்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், 'பப்ஜி' மதனை சென்னைக்கு அழைத்து வந்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து அவரிடம்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)