Skip to main content

10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பக்கோரி வாலிபர் சங்கம் பேரணி (படங்கள்)

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

 


மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சென்னையில் இன்று (ஜன29) கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

 

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மின்வாரியம் உள்ளிட்ட பலத்துறைகளைத் தனியார் மயம் என்ற பெயரில் பினாமிகளை வைத்து தன்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தேசத்தின் சொத்துகள் என வர்ணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறது அல்லது சூறையாடப்படுகிறது. எடப்பாடி அரசு மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் காவு கொடுத்து வருகிறது. 

 

மத்திய அரசு அடிமை சேவகம் செய்யும் மாநில அரசுக்கு எதிராக வாலிபர் சங்கம் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழகத்தில் மின்வாரியத்தில் 52ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. படித்த ஒரு கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் பணி வழங்காவிட்டால் வாலிபர்களின் இந்தப் போராட்டம் இன்னொரு வடிவம் பெரும்" என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜந்திரன் பேசுகையில், "அரசின் முதன்மைத் துறையாக மின்வாரியத்தில் பணிநிலைகளில் மாற்றம் செய்யவேண்டுமானால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். ஆனால், இந்த மாநில அரசு அதுபோன்ற நடவடிக்கையில் என்றுமே ஈடுபட்டது கிடையாது. மின்வாரியத்தில் பணிநியமனம் குறித்து சி.ஐ.டி.யு. வழக்குத் தொடுத்துள்ளது உண்மைதான். 5ஆயிரம் பணிநியமன உத்தரவு வழங்கும் போது, அதற்குச் சமமான பதவிகள் ஒழிக்கப்படும் என்ற வாரியத்தின் முடிவுக்கு எதிராகத்தான் மின் ஊழியர் சங்கம் வழக்குத் தொடுத்தது. மின்சாரத்  துறையில் பல ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிசெய்து வருகின்றனர். 

 

அவர்களுக்குப் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என்பது சங்கத்தின் கோரிக்கையாகும். கரோனா காலத்தைக் காரணம் காட்டி 40 வயதைக் கடந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மின்சாரவாரியத்தின் நிரந்தரமான பணிகளை அவுட்சோர்சிங் செய்யும் அரசின் திட்டத்தை தொழிற்சங்கம் ஏற்காது. சிஐடியு சங்கம்தான் கேங்மேன் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்தது. ஆண்களுக்கு மட்டுமன்றி மின்கம்பம் ஏறும் பயிற்சியைப் பெண் தொழிலாளர்களுக்கும் கொடுத்தது மின் ஊழியர் சங்கம்தான் என்பதை நினைவுப்படுத்துகிறேன் என்று கூறிய அவர், மின்வாரியத்தில்  72 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சாதனைப்படுத்தியது சி.ஐ.டி.யு" என்றார். 

 

வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பேசுகையில்,  "தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் சொற்ப இடங்களை உள்முகத் தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் பூர்த்தி செய்துவிட்டு, 60 விழுக்காடு காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், 5ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 15ஆயிரம் பேர் உடற்தகுதி தேர்வில் வெற்றிபெற்றனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வில் 14,954 பேர் கலந்துகொண்டனர். இந்தத் தேர்வு முடிவுகள் 2,020 மே-22 அன்று வெளியிடப்பட்டது. இவர்கள் கடந்த 9 மாதகாலமாக பணி நியமனத்துக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்" என்றார்.

 

cnc

 

மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் பேசுகையில், "கடந்த 2020 மார்ச் மாதம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கேங்மேன் பணிகளில் ஏற்கனவே இருக்கக்கூடிய 5 ஆயிரம் பணியாளர்களுடன் கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். ஆனால், இன்று வரை ஒரு பணியிடம் கூட நிரப்பவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சி என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டுகிறது" என்றார்.    

 

பேரணி நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பாலசந்திரபோஸ், கே.எஸ். கார்த்தீஸ் குமார், சுசீந்திரா, நந்தன், ஜோதிபாசு, பிரியசித்ரா, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், சுரேஷ், வடசென்னை மாவட்டச் செயலாளர் சரவணத்தமிழன்,  மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், மஞ்சுளா, சலாவுதீன் (திருவாரூர்), ஏசுராஜா (தஞ்சை), தேவேந்திரன் (திருவள்ளுர்)  தேர்வு செய்யப்பட்டு பணிவழங்கப்படாத இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
  life of the youth lost due to the negligence of the highway department!

கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால்  தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 

Next Story

சர்ச்சையில் சிக்கிய ஆ. ராசா; பா.ஜ.க கடும் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
BJP strongly condemned on A. Rasa, caught in controversy again

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியா ஒரு துணைக் கண்டம். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆ. ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.