Youths arrested in job seekers issue Police busy in retrieving CCTV footage ..!

திருச்சி, ரெட்டியூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவரது மனைவி, சில காலம் முன்பாக இவரைப் பிரிந்து சென்றதால், சதீஷ்குமார் தாய், தந்தையுடன் வசித்துவருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை தேடி புதுச்சேரிக்கு வந்துள்ளார். பல இடங்களில் முயன்றும் வேலை கிடைக்கவில்லை. கடந்த 26ஆம் தேதி இரவு மேட்டுப்பாளையம் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் வளாகத்தில் தூங்கச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது அவரை, பங்க் ஊழியர்கள் விரட்ட முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு ஒரு மணிக்கு பங்க் உரிமையாளர்கள் மேட்டுப்பாளையம் ராஜமௌரியா (27), ராஜவர்மன் (26) உள்ளிட்டோர்சதீஷ்குமாரிடம், “பில்லி சூனியம் வைக்க வந்துள்ளாயா? திருட வந்துள்ளாயா? உன்னை யார் அனுப்பியது?”என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு சதீஷ், “நான் சூனியக்காரன் இல்லை”என்று மறுத்துள்ளார். ஆனாலும் ஆத்திரமடைந்த ராஜமவுரியா, ராஜவர்மன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமார் மீது பெட்ரோலை ஊற்றி, 'உண்மையைச் சொல்லாவிட்டால் எரித்துவிடுவோம்' என மிரட்டியுள்ளனர்.

Advertisment

அப்போது திடீரென சதீஷ்குமார் மீது தீப்பற்றி, உடல் முழுவதும் எரிந்த நிலையில் சாலையில் ஓடி வந்த சதீஷ்குமார், தரையில் விழுந்து புரண்டு தீயை அணைத்தார். பைக்கில் வந்தவரிடம் லிஃப்ட் கேட்டு மருத்துவமனையில் விட்டுவிடும்படி கேட்டு, அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார். 60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ள அவரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.

அதனடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ராஜமௌரி, ராஜவர்மன் மற்றும் ஊழியர்கள் தட்சிணாமூர்த்திநகர் சிவசங்கர் (19), அரசூர் குமார் (47) ஆகியோரை 26ஆம் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வெற்றி நாராயணன், சீதாராமன் (எ) சிவா, பிரசாந்த் ஆகிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். பங்க் உரிமையாளர்கள் இருவரும் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மகன்கள் என்பதும், ராஜமவுரியா பாஜக வர்த்தகப் பிரிவு நிர்வாகியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் பங்க்கில் சதீஷ்குமார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. போலீசாரிடம் அது சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அந்தக் காட்சிகள் உடனடியாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் வி.ஆர். பாக்ஸிலிருந்து, நவீன தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி, வீடியோ காட்சிகளை மீட்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தக் காட்சி கிடைக்கப்பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனிடயே தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சதீஷ்குமார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.