திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ்(22). இவர் பெரியவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் பணிக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர், வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில், தான் வளர்த்து வரும் காளைக்குத் தீவனம் வைத்துவிட்டுத் திரும்பியுள்ளார். அப்போது ஜெயபிரகாஷை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த அவரைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி. புஸ்பராஜ், டி.எஸ்.பி சரவணன் மற்றும் உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
ஜெயபிரகாஷின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சடலத்தை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவல்துறையினரிடம் ‘கொலையாளியை கைது செய்யும் வரை சடலத்தை கொடுக்கமாட்டோம்’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இளைஞரை வெட்டிவிட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறோம் என உறுதி அளித்த பின்னர் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
அதன்பின் சடலம் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயபிரகாஷ், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? காதல் பிரச்சினையா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதும் காரணமா என போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மகன் மாணிக்கம் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜ்குமார் என்பவர் சீட்டு நடத்தியுள்ளார். ஜெயபிரகாஷ் குடும்பத்தார் அந்த சீட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், சீட்டு பணத்தை தவணை முடிந்தும் ராஜ்குமார் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் அவரது தந்தை மோகன் இருவரும் ராஜ்குமாரிடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அங்கு இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு சிறு அடிதடி ஆகியுள்ளது. இந்த கோபத்தில் ராஜ்குமார் மகன் மாணிக்கம், ஜெயபிரகாஷை வெட்டிக் கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மாணிக்கத்தின் தந்தை ராஜ்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.