![Youth misbehaved with college girl in Kanyakumari](http://image.nakkheeran.in/cdn/farfuture/uYlYyxOdcMRn97ZSkcb7qjNQSoXsQwR8-r00VL4qCy0/1701413647/sites/default/files/inline-images/993_346.jpg)
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை அடுத்த மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தீபிகா. இதில், அந்த பெண்ணின் எதிர்காலம் கருதி அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது. 20 வயதான இவர், தூத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது, தீபிகாவுக்கு சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த சரத்ப்ரியன் மற்றும் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்லின் என்ற மாணவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே வகுப்பறையைச் சேர்ந்த இவர்கள் மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். கல்லூரி நண்பர்கள் என்பதால் சரத்ப்ரியனை தீபிகாவின் வீட்டிற்குத் தெரியும் எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் விடுமுறை நாளில் சரத்ப்ரியன் தனது தோழியான தீபிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த மாணவியின் பெற்றோரிடம், “இன்னைக்கு எங்க அம்மாவுக்கு பர்த்டே, நாங்க எல்லாரும் பொழியூர் பீச்ல ஃபேமிலியா செலெப்ரெட் பண்ணலாம்னு இருக்கோம். நாங்க தீபிகாவையும் கூட்டிட்டு போகட்டுமா?” என சரத்ப்ரியன் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், நண்பர்தானே என்ற எண்ணத்தில் தீபிகாவை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சரத்ப்ரியனும் தீபிகாவும் காரில் சென்றுகொண்டிருந்தபோது சிறிது தூரத்தில் மற்றொரு நண்பரான மேக்ஸ்லின் என்பவரும் உடன் இணைந்துகொண்டார்.
இதையடுத்து, இவர்கள் மூன்று பேரும் பொழியூர் கடற்கரைக்குச் சென்றபோது அங்கு சரத்ப்ரியனின் அம்மாவோ அல்லது அவரது உறவினர்களோ என யாருமே இல்லை. இதனால் சந்தேகமடைந்த தீபிகா அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, சரத்ப்ரியனின் உறவினர்கள் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் எனக் கூறியுள்ளனர். இருந்தபோதிலும் தீபிகாவின் மனதில் ஒருவித பதற்றம் இருந்துகொண்டே இருந்தது.
அந்த நேரத்தில், சரத்ப்ரியனும் மேக்ஸ்லினும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து மது அருந்த தொடங்கியுள்ளனர். ஒருகணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தீபிகா, தன்னை வீட்டில் விட்டுவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், அந்த 2 இளைஞர்களுக்கும் போதை தலைக்கேறியதால் தீபிகாவின் மடியில் படுத்துக்கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஆனால், அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் தீபிகாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அங்கு வந்த 2 நபர்கள் தீபிகாவையும் அவரது 2 நண்பர்களையும் சுற்றி வளைத்தனர்.
ஏற்கனவே தனது நண்பர்களுடன் வந்து சிக்கிக் கொண்ட தீபிகா மனம் பதறிக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் இரண்டு பேர்களுடன் சிக்கியதால் என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில், அந்த 2 மர்ம ஆசாமிகளும் சேர்ந்து தீபிகாவையும் அவரது 2 நண்பர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, தீபிகாவின் ஆடைகளைக் கழற்றச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். ஆனால், அதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டுள்ளார். அப்போது, அந்த மர்ம கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சத்தம் போட்டால் உன்னைக் குத்திக் கொலை செய்து கடலில் தூக்கி வீசி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
ஒரு கட்டத்தில், இதனால் பயந்து போன தீபிகா கண்ணீர்விட்டுக் கதறியுள்ளார். அந்த நேரத்தில், மாணவியை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அந்த ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான இடத்தில், தீபிகாவின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அந்த வீடியோவில், தீபிகாவையும் அவரது நண்பர்களையும் தாக்கும்போது, எங்களை அடிக்காதீர்கள் என்று அவர்கள் அழுவதும், மாணவியை வீடியோ எடுக்கும்போது தனது கையால் முகத்தை மூடும்போது அந்த மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக கையை நீக்குவதும் பதிவாகியிருந்தது. அதன்பிறகு அந்த ஆசாமிகள், இதைப் பற்றி வெளியே சொன்னால் இந்த வீடியோவை லீக் செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு தீபிகாவின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த தீபிகா, நடந்த விஷயங்களை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை பாழாகிவிட்டதாக நினைத்துக்கொண்டு தினந்தோறும் கண்ணீரிலேயே வாழ்ந்து வந்துள்ளார். யாரை பார்த்தாலும் பயம்.. எதற்கெடுத்தாலும் பயம் என தினம் தினம் ஒருவித நடுக்கத்திலேயே இருந்துள்ளார். இத்தகைய சூழலில், ஒருநாள் தீபிகாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியது தீபிகாவை வன்கொடுமை செய்த மர்ம நபர்கள். தங்களது ஆசைக்கு மீண்டும் இணங்க வேண்டும் என வற்புறுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லியுள்ளனர். அப்போது, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தீபிகா.. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோவை சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளனர். அந்த வீடியோவும் காட்டுத்தீ போல் வைரலானது.
இந்நிலையில், இந்த தகவலைத் தெரிந்துகொண்ட மாணவி தீபிகா தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டு இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தீபிகாவுக்கு ஏற்கனவே நிச்சயம் செய்து வைத்திருந்த நபரும் திருமணம் வேண்டாம் என்று கூறிச் சென்றுள்ளார். தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்ற நண்பர்கள், கடற்கரையில் நடந்த அத்துமீறல்கள், கொடூரமாக வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் என அதையே நினைத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தனக்கு தைரியத்தை வரவழைத்துக்கொண்ட தீபிகா, இந்த சம்பவத்தை வெளியே கொண்டுவர முடிவு செய்தார்.
தன்னைப்போல் இனிமேல் வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற கொடுமைகள் நடந்து விடக்கூடாது என்றும் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என நினைத்தார். அதன்படி, நடந்த சம்பவங்கள் ஒன்று விடாமல் பொழியூர் போலீசிலும் சம்பந்தப்பட்ட மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட கேரள போலீசார் மாணவியிடம் நேரடியாக வந்து வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து, இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இத்தகைய கொடூரத்தை செய்தது பருத்தியூர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஐபின் மற்றும் அவரது நண்பர் ஷாஜன் என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மீனவர் ஐபின் மற்றும் தீபிகாவின் கல்லூரி நண்பர் சரத் ப்ரியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் ஷாஜன், தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்லின் ஆகியோரை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்நிலையில், மாணவியை வன்கொடுமை செய்தவர்களுக்கும் அவரது நண்பர்கள் இரண்டு பேருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைகளைப் போல் பொழியூர் கடற்கரையில் நடந்த சம்பவம் என்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.