டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் புரட்டிப் போட்ட போது மீட்புப் பணிக்காக இளைஞர்களால் கைகோர்த்து தொடங்கிய கைஃபா என்ற அமைப்பு புயலால் சேதமடைந்த மரங்களை அகற்றி சீரமைத்த பிறகு டெல்டா மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களை சீரமைத்து நீர்நிலைகளை உயர்த்தவும் நிலத்தடி நீரை சேமிக்கவுமாக விரிவுபடுத்தப்பட்டது
பேராவூரணியில் தொடங்கி கல்லணை கடைமடை பாசனப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்திலும் பணி செய்ய பின்னர் தமிழ்நாடு முழுவதும் பணியை விரிவாக்கிக் கொண்டது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டை, கால்வாய்களை சீரமைத்து தண்ணீரையும் சேமித்து காட்டியுள்ளனர். இளைஞர்களின் சொந்த செலவிலும் தன்னார்வலர்களின் பங்களிப்பிலும் நீர்நிலை மராமத்துப் பணிகளை செய்து வரும் கைஃபா வின் செயல்பாடுகளைப் பார்த்து மில்க் மிஸ்ட் நிறுவனம் பொக்கலின் இயந்திரங்களை சொந்தமாகவே வாங்கிக் கொடுத்துவிட்டது.
அப்படி 2019 ஆம் ஆண்டு மில்க் மிஸ்ட் நிறுவனம் வாங்கிக் கொடுத்த புதிய பொக்கலைன் இயந்திரம் முதன் முதலில் கீரமங்கலம் வண்ணான்குளத்தைச் சீரமைத்து முதல் பணியை தொடங்கி தற்போது 204 வது குளமாக பேராவூரணி ஆண்டிகாடு - பள்ளத்தூர் பெரியகுளம் ஏரியை தூர்வாரிக் கொண்டிருக்கிறது. மில்க் மிஸ்ட் நிறுவனம் கைஃபா வுக்கு இந்த வாகனத்தை வாங்கிக் கொடுத்த நாளை பிறந்த நாளாக கருதும் கைஃபா அமைப்பினர் அந்த நாளில் பொக்கலைன் எந்திரத்தின் பிறந்த நாளாக கருதி கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து கைஃபா அமைப்பினர் கூறும் போது, “இளைஞர்களின் கையில் இருந்த சிறு தொகையுடன் சின்னச் சின்ன பணிகளைத் தொடங்கி நீர்நிலைகளை சீரமைப்பதைப் பார்த்து ஏராளமான தன்னார்வலர்கள் தானாக முன்வந்து செலவில் பங்கெடுத்துக் கொண்டனர். பல ஆண்டுகளாக மராமத்து இல்லாமல் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த நீர்நிலைகளில் கைஃபாக தூர் வாரிய ஏரி, குளங்களில் தண்ணீர் நிரைந்திருப்பதைப் பார்த்ததுடன் அப்பகுதியில் நிலத்தடி நீரும் உயர்வதை மக்கள் கண்கூடாக கண்டனர். இதனைப் பார்த்த மில்க்மிஸ்ட் நிறுவனம் ஒரு பொக்கலைன் இயந்திரத்தை புதிதாக வாங்கி கைஃபாவிடம் ஒப்படைத்தனர். அந்தப் பொக்லைன் மூலம் இதுவரை 204 ஏரி, குளங்களை சீரமைத்து தண்ணீர் நிரப்பி சுற்றுச்சூழலை பாதுக்க ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடவும் உதவிய பொக்கிலின் கைஃபா வுக்கு வந்து 5 வருசமாச்சு. அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுகிறோம்” என்றனர்.
நீர்நிலை உயர உதவிய பொக்லைனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.