'மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றுவோம்' என்ற நோக்கில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு ஊர் ஊராகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரக்கன்றுகளைநட்டார் நடிகர் விவேக். இவரது விழிப்புணர்வைப் பார்த்து ஏராளமான இளைஞர்கள், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதுவரை சுமார் 33.23 லட்ச மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும், கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள், மாணவர்களை சமூக வலைதளங்கள் மூலமும்நேரிலும் பாராட்டியுள்ளார்.

Advertisment

இப்படி ஒரு நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ‘இளைஞர்கள் மன்றம்’ சார்பில் நீர்நிலைகளை சீரமைப்பதும், மரக்கன்றுகள்நடப்படுவதையும் அறிந்த விவேக், அந்த அமைப்பினரை பாராட்டி ட்விட்டரில் பதிவு போட்டிருந்தார். மேலும், இளைஞர் மன்றத்தின் 100வது நாளில், குளம் சீரமைப்பு நாளாகக் கொண்டாடப்படுவதாக இருந்தது. இதில், நடிகர் விவேக் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக நடிகர் விவேக் கலந்துகொள்ள முடியாமல் போனது. அதனால், 100வது நாள் விழாவும் ரத்து செய்யப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இன்று அவரது மறைவு இளைஞர்களை துயரத்தில் ஆழ்த்தியது. உடனே கொத்தமங்கலம் பெரிய குளத்தில் ஒன்று கூடிய இளைஞர்கள், “நடிகர் விவேக் மறைவு நினைவாக, மரக்கன்று நட்டு அய்யா விவேக்கின் கனவை நிறைவேற்றுவோம். அவர் உடல் மண்ணுக்குள் போகும் முன்பே, இன்று மாலைக்குள் தமிழக இளைஞர்கள் நினைத்தால் ஒரு கோடிக்கு மேல் மரக்கன்றுகளை விதைக்க முடியும்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதேபோல, பெரியாளூர் குருகுலம்பள்ளி தாளாளர் சிவநேசன் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடிகர் விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்ற மரக்கன்றுகளை நட்டனர்.