வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர், பெண்ணாடம் பேரூராட்சி திருமலை அகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வலிங்கம். இவரின் மகள் காயத்திரிக்கும்(25) அரியலூர், சிலப்பனூரில் வசிக்கும் அருள்மணியின் மகன் வீரமணிக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. கணவர் வீரமணி தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. வீரமணி - காயத்திரியின் திருமணத்திற்கு பெண் வீட்டில் இருந்து 15 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். திருமணத்திற்கு பின்புதான் சொந்த வீடு கட்டுவதாக வீரமணி பெண் வீட்டாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணமும் நடைபெற்றிருக்கிறது.
இந்த நிலையில் திருமணம் நடந்த சில ஆண்டுகள் கழித்துக் காயத்திரி தனது கணவர் வீரமணியிடம் வீடு கட்டுவது குறித்துப் பேசியுள்ளார். அப்போது, காயத்திரியை அவரது தந்தையிடம் கணவர் வீரமணி பணம் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மேலும் வீரமணியின் தாய் பட்டாத்தாள், தந்தை அருள்மணி, அண்ணன் வேலுமணி ஆகியோர் காயத்திரியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தொடர்ந்து, காயத்திரி கழுத்திலிருந்து தாலியைப் பறித்துவிட்டு வீரமணிக்கு மறுமணம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து காயத்திரி வீரமணியின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நடந்த சம்பவத்தைக் காயத்திரி தனது பெற்றோர் வீட்டில் சொல்ல, தந்தை விஸ்வலிங்கம் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். பின்னர், போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்துள்ளனர். போலீசார் முன்னிலையில் வீரமணி, சொந்த வீடு கட்டும் வரை காயத்திரி தாய் வீட்டில் இருக்கட்டும், வீடு கட்டிய பிறகு அழைத்துச் செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது தாலியைத் திரும்பித் தருமாறு காயத்திரி கேட்டுள்ளனர். ஆனால் தாலியை தர மறுத்து வீரமணியின் வீட்டார் காயத்திரியை தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த காயத்திரி, வீட்டிற்குச் சென்று தீயிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது காயத்திரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த காயத்திரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து விஸ்வலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் வீரமணி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.