கோவை, காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஸ்ரீராம். 25 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஸ்ரீராம் தனது நண்பருடன் பைக்கில் காளம்பாளையத்தில் இருந்து, மாதம்பட்டி சாலையில் சென்றார். செல்லப்பக்கவுண்டன் புதுார் அருகே சென்றபோது அந்த வழியாக எதிரே வந்த மற்றொரு பைக், அவர்கள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஸ்ரீராம், பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் மூளைச்சாவு அடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்ரீராமின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் செய்ய முன் வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இரண்டு சிறுநீரகம், கல்லீரல், கணையம், கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இவற்றில், கணையம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீராம் உடலுக்கு உரிய அரசு மரியாதையுடன் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர், பின்னர், உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். கண்ணீருடன் உடலைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீராம் குடும்பத்தினர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த 25 வயது இளைஞரின் உடலைப் பெற்றோர்கள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஸ்ரீராம் மறைந்தாலும், அவர் மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அவரது நண்பர்கள் புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.