Skip to main content

ஆசை ஆசையாய் வெளிநாட்டில் இருந்து குடும்பத்தைப் பார்க்க வந்த இளைஞர்; விமான இருக்கையிலேயே உயிரிழந்த சோகம்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

 A young man who came to visit his family from abroad because of desire; Tragedy of death in the plane seat

 

சிவகங்கையில் இருந்து ஓமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றவர் சொந்த ஊருக்குத் திரும்பிய பொழுது விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை வந்தடைந்தது. தொடர்ந்து அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினர். ஆனால் ஒரே ஒரு இளைஞர் மட்டும் இருக்கையை விட்டு எழவில்லை. உடனடியாக விமானப் பணிப் பெண்கள் அந்த இளைஞரிடம் சென்னை வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவர் மயக்க நிலையில் இருக்கையிலேயே தூங்கியது போல் கிடந்தார். தொடர்ந்து அறிவுறுத்தியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த பணிப்பெண் சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தார்.

 

உடனடியாக மருத்துவக் குழுவினர் அந்த இளைஞரை பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் விமானத்தில் பயணித்த நேரத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் குறித்து விசாரிக்கையில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த தனசேகர் (38) என்பது தெரியவந்தது. உடனடியாக சென்னை விமான நிலைய போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு இளைஞர் தனசேகரின் உடல் விமானத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது. பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் தனசேகரின் குடும்பத்தாருக்கு தொலைப்பேசி மூலம் விமானத்திலேயே உயிரிழந்த தகவலைத் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.