இளம்வயதில், குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில், தாங்கள் தேவையென நினைப்பது கிடைத்தே ஆக வேண்டும் என முரண்டு பிடிப்பவர்கள் உண்டு. சிவகாசியைச் சேர்ந்த 19 வயது முத்துக்குமாரும், செல்போன் வாங்கித் தரவேண்டுமென்று தந்தை வைரமுத்துவிடம் பிடிவாதமாகக் கேட்டிருக்கிறான். வாங்கித் தரவில்லையென்றால் தூக்கு மாட்டிக்கொண்டு செத்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். முன்பு வெல்டிங் பட்டறையில் லேத் வேலைக்குச் சென்ற முத்துக்குமார் கடந்த 6 மாதங்களாகச் செல்லவில்லை. இந்நிலையில், வைரமுத்துவோடு அவர் மனைவியும் சேர்ந்து மகன் முத்துக்குமாரை சமாதானப்படுத்தி, செல்போன் வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளனர்.
மறுநாள் காலை வழக்கம்போல பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர். மதியம் சாப்பிடுவதற்காக வைரமுத்து திரும்பியபோது வீடு பூட்டியிருந்தது. கையில் வைத்திருந்த சாவியால் நெம்பி கதவைத் திறந்தபோது, கைலியில் தூக்கிட்டு மகன் முத்துக்குமார் பிணமாகத் தொங்கியிருக்கிறான். முத்துக்குமாரின் உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சிவகாசி டவுன் காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது.
பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்பதும், தராவிட்டால் தூக்கில் தொங்குவேன் என முத்துக்குமார் மிரட்டுவதும், அந்த வீட்டில் அடிக்கடி நடந்திருக்கிறது. சொன்னதுபோலவே, ஒரு செல்போனுக்காகத் தூக்கில் தொங்கி உயிரைவிட்டுள்ளான் முத்துக்குமார். உயிரின் மதிப்பு புரிந்திருந்தால் முத்துக்குமார் போன்றவர்கள் தற்கொலை செய்துகொள்வார்களா? இத்தகையோருக்கு அதை எப்படி புரியவைப்பது என்பது, சமூகத்துக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது.