
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரை அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் முன்னே சென்ற லாரி மீது அரசு பேருந்து ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியின் ஓட்டுநர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் நீலாங்கரை போலீசார் லாரியை பின் தொடர்ந்து சென்றனர். பின்பு சாலையின் ஓரம் அரசு பேருந்து நிறுத்தப்பட்டு அதில் இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டிருந்துள்ளார். அந்த நபரிடம் போலீசார் விசாரித்ததில் அவர் பேருந்தின் ஓட்டுநர் இல்லை என்றும், பேருந்து கடத்தி வரப்பட்டது என்ற பகீர் தகவலும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் அந்த நபர் போலீசாரிடம், "என் பெயர் ஆபிரகாம்(35), பெசன்ட் நகரில் வசித்து வருகிறேன். நேற்று இரவு அரசு பேருந்து ஒன்றில் பயணித்தபோது சில்லறை பாக்கி தொடர்பாக நடத்துனருக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதில் நடத்தினர் என்னை தரைகுறைவாக பேசினார். அதனால் மது அருந்திவிட்டு திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். என்னைத் திட்டிய நடத்துனரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாருக்கும் தெரியாமல் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்திற்குள் புகுந்து ரகசியமாக திருடி மகாபலிபுரம் வரை ஓட்டிச்செல்லத் திட்டமிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். அப்படி ஓட்டி சென்று கொண்டிருந்த போதுதான் லாரி மீது அரசு பேருந்து மோதியுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் இருந்து பேருந்தை மீட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.