![Young Girl Passes away near Tambaram Station](http://image.nakkheeran.in/cdn/farfuture/xh4Dzsm0UjMseyYrn4rxYHDi25oC90riyi4XfekawL4/1632401296/sites/default/files/inline-images/th-1_1874.jpg)
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரின் மகள் ஸ்வேதா(21), தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியன் படித்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்வேதா படித்து வரும் தாம்பரம் தனியார் கல்லூரி அருகே அவரும் திருக்குவளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு அவரும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேலையூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஸ்வேதா மருத்துவமனையிலேயே இறந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்வேதாவுக்கும் ராமச்சந்திரனுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கிறதா? காதல் விவகாரம் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் மறைமலைநகர் பகுதியில் தங்கியிருப்பதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.