நேற்று கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுகவில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை பறைசாற்ற இந்த முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''இதற்கு முன்பு கூடதான் இதுபோன்ற கூட்டணியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இது முதல் தடவை அல்ல. நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் ஆனால் ஆட்சி எங்களிடம் இருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் மத்தியில் மூன்றாவது முறையாக எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். உங்களோடு கூட்டணியில் உள்ளவர்கள் அடுத்த சட்டசபை தேர்தல் வரை எத்தனை நாள் கூட்டணியில் இருப்பார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம்.
எங்களுடைய கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. 2004-இல் திமுக மத்தியில் கூட்டணி அரசின் ஆட்சி அமைக்கின்ற போது மந்திரிகளுடைய துறைகளுக்காக என்னென்னவெல்லாம் பஞ்சாயத்து நடந்தது; யார் யார் கிட்ட எல்லாம் பஞ்சாயத்து நடந்தது. பத்திரிகையாளர்கள்தான் எந்த மினிஸ்ட்ரி யாருக்கு வேண்டும் என முடிவு செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால் இப்பொழுது எவ்வளவு ஸ்மூத்தாக கூட்டணி அரசு எல்லா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடந்துள்ளது.
கடந்த ஏழாம் தேதி பார்லிமென்டில் நிதீஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் இவ்வளவு திறமையான பிரதமருடைய தலைமையில் பணியாற்றுவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என இரண்டு தலைவர்களும் பேசுகிறார்கள். அதனால் எங்களுடைய கூட்டணியில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த முடியும் என்று நினைக்க முடியாது. அத்தனை கூட்டணிக் கட்சிகளும் பிரதமர் மோடி மீது பிரம்மாண்டமான நம்பிக்கை வைத்துள்ளார்கள்; எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். எங்களுடைய ஐந்து வருட காலம் எந்தவித சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக போகும். நாங்கள் எந்தப் பத்திரிகையாளரையும், இடைத் தரகரையும், புரோக்கரையும் வைத்துக்கொண்டு மந்திரி சபையை அமைக்கவில்லை'' என்றார்.