
சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் இணைந்து உலகப் பாரம்பரிய நாளை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் முப்பெரும் விழாவாகக் கொண்டாடினர்.
உலக மரபு நாளைய முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் ஓவிய போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு, கல்வெட்டு ஒப்படைப்பு நிகழ்வு ஆகிய மூன்று நிகழ்வுகள் நடைபெற்றன.
பள்ளி மாணவர்களுக்கு உலக மரபு நாளை முன்னிட்டு 6,7,8 மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் 9 முதல் 12 மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது இதில் ஒரு பிரிவில் 86 மாணவர்களும் மற்றொரு பிரிவில் 43 மாணவர்களும் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு இரு பிரிவுகளிலும் முதல் பரிசு ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு 750 ரூபாய் மூன்றாம் பரிசாக 500 ரூபாயும் வழங்கப்பட்டது.
கருத்தரங்க நிகழ்விற்கு சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா. சுந்தரராஜன் தலைமை வகித்தார்,அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்ரிசாமி வரவேற்றார், சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவநர் புலவர் கா.காளிராசா முன்னிலை வகித்து நோக்க உரையாற்றினார் சிவகங்கை தொல்நடைக் குழுவின் செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் மு. முருகானந்தம் தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் நல்லாசிரியர் முத்துக் காமாட்சி, கலைமகள் ஓவியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா சிவகங்கையின் திருப்பத்தூர் எனும் தலைப்பிலும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் திருமலை நாயக்கரும் மதுரையும் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். சிவகங்கை தொல்நடைக் குழுவின் இணைச் செயலர் க. முத்துக்குமரன் நன்றியுரைத்தார், நிகழ்ச்சியை சிவகங்கை தொல்நடைக் குழுவின் செயலர் இரா. நரசிம்மன் ஒருங்கிணைத்தார்.நிகழ்வின் இறுதியில் மானாமதுரை வைகையாற்று வடகரையில் இருந்து எடுத்துவரப்பட்ட 10, 11 நூற்றாண்டு கல்வெட்டு ஒப்படைக்கப்பட்டது.

கல்வெட்டு
வைகை ஆற்றின் மணலில் புதைந்து கிடந்த கல்தூண் ஒன்று 1980 வாக்கில் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு வைகை ஆற்று வடகரையில் போடப்பட்டு கிடந்தது இதை தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் ஐயா அவர்கள் முறைப்படி படி எடுத்து வாசித்து ஆவணத்தில் பதிவு செய்திருந்தார்கள். ஆனாலும் இக்கல்வெட்டு போதிய பராமரிப்பு இன்றி கேட்பாரற்று ஆற்றுக் கரையில் கிடந்தது. சிவகங்கை தொல்நடைக் குழு ஒருங்கிணைப்பில் சிவகங்கை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மற்றும் மானாமதுரை வட்டாட்சியர் மானாமதுரை நகர்மன்றத் துணைத் தலைவர் ஒத்துழைப்போடு கல்வெட்டு சிவகங்கை அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அக்கல்வெட்டு இன்று சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் அரசு சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கல்வெட்டுச் செய்தி
ராஜ ராஜ சோழனின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் 999 ஆம் ஆண்டில் சேந்தன் செங்கோடன் மனைவி பூதனம்பியம்மை சாவா மூவா பேராடு 25 ல் தினமும் ஒரு ஆழாக்கு நெய் வழங்கியமையை குறிக்கிறது.மற்றொரு பக்கத்தில் ஸ்ரீ வல்லப பாண்டியனின் ஐந்தாவது ஆட்சி ஆண்டில் 1019 ஆம் ஆண்டு பாண்டிய மண்டலத்து கருங்குடி நாட்டு சுந்தரபாண்டியன் கோன் மேநட்டூர் பூவன் நெய் விளக்கு வழங்கிய செய்தியை குறிக்கிறது இது இரண்டு கல்வெட்டிலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு விளக்கு எரித்தமையை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தற்பொழுது என்று குலாலர் தெருவாக அழைக்கப்படும் இப்பகுதி முன்னாளில் கல்வெட்டின் படி திரு குமரமங்கலம் என அழைக்கப்பட்டு இருக்கிறது. ஒரே கல்வெட்டில் ஒரு பக்கத்தில் சோழர் கால பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டும் மற்றொரு பக்கத்தில் 11 ஆம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டும் இக்கற்தூணில் இருப்பது சிறப்பு.
இந்நிகழ்வில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் சிவகங்கை தொல்நடைக் குழுவைச்சார்ந்த முத்துப்பாண்டியன், ரமேஷ் கண்ணா, ராமச்சந்திரன், கிருஷ்ணவேணி, இலக்கிய வடிவு, லோகமித்ரா மானாமதுரை சோமசுந்தர பாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.