மதுரையில் மனிதக் கழிவுகளை ஒப்பந்த பணியாளர் வெறும் கைகளாலே சுத்தம் செய்யும் காட்சிகள் இணையத்தில்வைரலாகி வருகிறது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றது. பாதாள சாக்கடைக்கு உள்ளே இறங்கி மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள வைகை ஆற்றின் கரையில் ஓபுளாபடித்துறை பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனைச் சரி செய்வதற்காக மதுரை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி எந்த விதமான பாதுகாப்பு உபகரணமும், கைகளுக்குக் கையுறைகளும் இல்லாமல் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்தியைப் பதிவுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.