இந்திய பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கக் கூடிய நிகழ்வு இரண்டு நாட்கள் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அந்த குறிப்பிட்ட நாட்களான 11, 12 ஆகிய தேதிகளில் செய்யப்பட்டு இருக்கக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருந்தது.
சென்னை விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வழியாக பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து அங்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சாலை வரக்கூடிய இடம் முழுவதுமே 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களுக்கும் அதி காலை 6 மணியிலிருந்து இரவு 11 மணிவரை கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற எந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்து காவல் துறை தெரிவித்திருக்கிறது.
விமானநிலையத்தில் இருந்து கிண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வரை செல்லக்கூடிய அந்த வழியில் அமைந்திருக்கக் கூடிய கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் பயணிக்க கூடிய அந்த வழித்தடங்களில் முக்கியமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் உள்ள சில ஐடி நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிசெய்யும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
நாளை பாதுகாப்பு கெடுபுடிகள் அதிகமாக இருக்கும் என்பதால் சில ஐடி நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளாகவாவும், சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதிகாலை விரைவில் நிறுவனத்துக்கு வந்து பணிகளை முடித்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பு காரணமாக நாளை ஒருநாள் வணிக நிறுவனங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.