மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு எட்டுக்குடியில் ஐந்து கிராமத்து மக்கள் மௌன அஞ்சலி செலுத்தியதோடு பெண்கள் ஒப்பாரி வைத்து கலைஞருக்கு மரியாதை செய்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்துள்ள எட்டுக்குடி முருகன் கோவிலில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலத்தில், எட்டுக்குடி, சொர்ணகுடி, சத்தியமங்கலம், உள்ளிட்ட 5 கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் ஒப்பாரி வைத்து, கலைஞரின் புகழைப் பாட்டாக பாடியும் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர். அதேப்போல் வேளாங்கண்ணி திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் அமைதி ஊர்வலங்கள் மெளன அஞ்சலி செய்து வருகின்றனர்.
அதே போல் மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.