புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.
அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.
செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.
அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.
ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.