/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bars-std.jpg)
திருவண்ணாமலையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 32 புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு 24 புதிய வாகனங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் பங்கேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வாகனங்கள் மற்றும் புதிய பேருந்து இயக்கத்தினை துவக்கி வைத்தனர்.
இதில் உரையாற்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “தமிழகத்திலேயே திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலம் தான் அதிக வருவாயை ஈட்டி தந்து சிறப்பாகச் செயல்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான் தமிழகத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் கூட பொதுமக்கள் பயன்படும் வகையில் பேருந்து இயக்கப்பட்டது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறைக்காக 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுக் கால அதிமுக ஆட்சியில் 14 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே புதிதாக வாங்கப்பட்டது. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போக்குவரத்துத் துறையில் 7,200 புதிய பேருந்துகளை வாங்க முடிவெடுத்து தற்போது 1500 புதிய பேருந்துகளை வாங்கி இயக்கி வருகிறது. படிப்படியாக 7,200 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/banyansi.jpg)
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கான விடியல் பயணத்தைத் துவக்கி வைத்ததில் இருந்து தற்போது வரை 500 கோடிக்கு மேல் இலவச பயணங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பார்த்துத்தான் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் மகளிர்க்கான இலவச பயணம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விடியல் பயணத்தின் மூலம் போக்குவரத்துத் துறைக்கு நஷ்டம் எதுவும் இல்லை. ஒவ்வொரு வருடமும் 2500 கோடி ரூபாயைப் போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் வழங்கி வருகிறார். அதனால் தான் போக்குவரத்துத் துறையினர் மாதம் ஒன்றாம் தேதியே சம்பளம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயணம் என்பது மகளிர் வாழ்க்கையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மகளிர்க்கான விடியல் பயணம் மட்டுமல்ல போக்குவரத்துத் துறைகளுக்கான விடியல் பயணம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)