WOMEN INCIDENT POLICE INVESTIGATION PUDUKKOTTAI DISTRICT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மனைவி கோகிலா (வயது 36).கடந்த அக்டோபர் 1- ஆம் தேதி அவரது வீட்டில் சேலையில் தூக்கிட்டு சடலமாகக் கிடந்தார். அவரது உடல் அருகில் இருந்த ஒரு நோட்டில் "என் சாவுக்கு காரணம் எம்.எம்.குமார் மற்றும் அவரது மனைவி தான். செய்யாத தப்பிற்கு என் மீது பொய் புகார் கொடுத்துவிட்டனர். அந்த புகார் பற்றி விசாரிக்காமல் எஸ்.ஐ. ஜெயக்குமார் மற்றும் பெண் காவல்துறையினர் அதிகாலையில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். காவல்துறையினர் கைது செய்வார்களே என்று என் கணவர் வீட்டிற்கே வரவில்லை. இந்த மன உளைச்சலால் சாகிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இரண்டு நாட்களுக்கு பிறகு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் 2 ரத்தக் கட்டுகளும், வயிற்றில் விஷம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சடலத்தை வாங்கவோம் என்ற உறவினர்கள், புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரிக்காமல் விசாரணை அதிகாரி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்தனர். அதன்படி காவல்துறையினர் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் சடலத்தை பெற்று அடக்கம் செய்தனர்.

Advertisment

இந்த நிலையில், கோகிலா வழக்கை விசாரிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி. வந்திதா பாண்டே புதிய விசாரணை அதிகாரியாக அறந்தாங்கி டி.எஸ்.பி. தினேஷ்குமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

புதிய விசாரணை அதிகாரியிடம் கடிதம் எழுதப்பட்ட நோட்டு ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விசாரணையில் கழுத்தில் ஏற்பட்டிருந்த ரத்தக்கட்டுகள் பற்றியும் தெரிய வரும். மேலும் கோகிலாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கின்றனர். விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.