பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பூர்வஜா என்பவர், சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி சிஏ பயின்று வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் 19- ஆம் தேதி அன்று நடந்துச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர், இரண்டு சவர தங்கச் சங்கலியைப் பறித்துச் சென்றனர். இது குறித்து பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தின் குற்றப்பிரிவுக் காவல்துறையினர், தப்பியோடிய வழிப்பறிக் கொள்ளையனை பிடிக்க வியூகம் வகுத்தனர். இதனிடையே, தியாகராயர் நகர் பசுல்லா சாலை போக்குவரத்து சிக்னல் கீழே கிடந்த செல்போன் ஒன்றை எடுத்த போக்குவரத்து காவலர், அதனை போக்குவரத்துக் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், கீழே கிடந்த செல்போன் தங்களுடையது எனக் கூற, காவல்துறையினர் அதற்குரிய ஆவணத்தைக் கேட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து காவல்துறையினரிடம் செல்போனைக் கேட்டு இருவரும் தொந்தரவு செய்துள்ளனர். பின்னர், இருவரையும் பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வசந்த் பிரியன் என்ற நபர், பூர்வஜாவின் செயினை பறித்துச் சென்ற போது, செல்போன் தவறி கீழே விழுந்ததாகக் கூறியுள்ளார். உடனே சுதாரித்த காவல்துறையினர், பின்னணி குறித்து விசாரித்த போது, வசந்த் பிரியன் மீது வடபழனி, மதுரவாயல், வண்ணாரப்பேட்டை, ராஜாமங்கலம், வில்லிவாக்கம், புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக, பாண்டி பஜார் குற்றப்பிரிவு காவல்துறையினர், தப்பியோடிய வசந்த் பிரியனின் கூட்டாளியான மனோஜ் குமார் என்பவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட பைக், இரண்டு சவர தங்க செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தவறவிட்ட செல்போனால் வசந்த் பிரியனும்,மனோஜ் குமாரும் தானாக வந்து சிக்கியதால் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.