வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் எஸ்.ஐ அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகள் தின்று ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலை முயற்சிக்கு முன்பு அவர் தனது வாட்ஸ்அப்பில் வைத்துள்ள “வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும், சிலரிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது. சுயநலத்திற்காக அல்ல தன்மானத்திற்காக” என்ற பதிவு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கீழ சவேரியார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ் - ஜாஸ்மின் வித்யா தம்பதியினர். ஜாஸ்மின் வித்யா தனது கணவர் ஆரோக்கிய ராஜ் மீது சமூக நலத்துறை அலுவலகத்தில் வரதட்சணை புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்காக ஜாஸ்மின் வித்யாவிற்காக வழக்கறிஞர் கலீல் ரகுமான் சமூக நலத்துறை அலுவலகம் சென்றுள்ளார்.
சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி, ஜாஸ்மின் வித்யாவின் வழக்கறிஞரான கலீல் ரகுமானை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு புகார் குறித்து ஆரோக்கியராஜிடம் விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து வெளியே வந்த ஆரோக்கியராஜ், வழக்கறிஞர் கலீல் ரகுமானை ஒருமையிலும் ஆபாசமாகவும் திட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக கலீல் ரகுமான் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அவரது செல்போன் திருப்பி வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புகார் கொடுக்கச் சென்ற இடத்தில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா, தன்னை அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலீல் ரகுமான் முறையிட்டிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எஸ்.ஐ சங்கீதாவை இடமாற்றம் செய்வதாக முடிவானது. அதன்படி திருக்கோகர்ணம் எஸ்.ஐ சங்கீதா ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நேற்று காலை திருக்கோகர்ணம் காவல் நிலையம் சென்ற எஸ்.ஐ சங்கீதா, தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு லீவு கிடைக்கவில்லை. லீவுக்காக கடிதம் எழுதி வைத்தவர் மன உளைச்சலுடன் மாலை வீட்டிற்கு வந்து அதிகமான தூக்க மாத்திரைகளைத் தின்று மயங்கி இருக்கிறார். வெகு நேரமாக எழாத அவரை உறவினர்கள் பார்த்து தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.ஐ சங்கீதா தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து காவல் நிலைய நாட்குறிப்பை பார்த்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. லீவ் லெட்டருடன் ‘தன் சாவுக்கு காரணம் வழக்கறிஞர்களின் போராட்டமே. தவறு செய்யாத எனக்கு பணியிட மாற்றம். என் சாவுக்கு பிறகாவது போலீசாருக்கு நல்லது நடக்கட்டும்’ என்று எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் போலீசார் கூறும் போது, வழக்கறிஞர் புகாரில் கூறப்பட்டுள்ள நபர் மீது வழக்குப் பதிவு செய்தாகிவிட்டது. அதன் பிறகு போராட்டம் செய்து போராட்டத்தின் போது சங்கீதா எஸ்.ஐயை தரக்குறைவாக சிலர் பேசியுள்ளனர். மேலும் போலீசாருக்காக இனிமேல் எந்த வழக்கிற்காகவும் யாரும் ஆஜராகக் கூடாது, அவர்களை நீதிமன்றத்தில் உட்கார வைக்கக் கூடாது என்றெல்லாம் பொது வெளியில் பேசியுள்ளனர். இந்த மன உளைச்சலில் இருந்த எஸ்.ஐ, தவறு செய்யாத தனக்கு இடமாறுதல் கொடுத்து விடுப்பும் தரவில்லை என்ற விரக்தியில் இப்படி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருகிறார் என்கின்றனர்.