
கடலூரில் ரயில் நிலையத்தில் வைத்து பெண்ணின் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. இவர் கடந்த ஆறாம் தேதி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை தாம்பரத்தில் இருந்து கும்பகோணம் சென்றுள்ளார். ரயிலானது சரியாக அதிகாலை 3.30 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்பொழுது திடீரென ரயிலில் ஏறிய மர்ம நபர்கள் இருவர் ராதிகா கழுத்தில் இருந்து தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக ராதிகா அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக கடலூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களைப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் இருவரும் தாலிச் சங்கிலி பறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தாலியைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.