அரியலூர் மாவட்டம் அருகே பார்ப்பனச்சேரியை சேர்ந்தவர் அன்னப்பட்டு(50). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தற்போது மகனுடன் வசித்து வருகிறார். இவர், கீழப்பழுவூர் சமத்துவபுரம் அருகே ஒருவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மக்காச்சோளம் பயிர் செய்து வந்துள்ளார். அதனால் தினசரி தனது விவசாய நிலத்தைப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று தனது சோளக்காட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் சோளக்காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உடலில் ரத்த காயங்களுடன் அன்னப்பட்டு அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கீழப்பழுவூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் அங்கிருந்து போலீசார் சம்பவம் நடந்த சோளக்காட்டிற்கு விரைந்து சென்று அன்னப்பட்டு இறந்து கிடந்த நிலையை பார்த்து அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரேதப் பரிசோதனையில் அன்னப்பட்டு இறப்பதற்கு முன்பு பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அன்னபட்டு பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அன்னபட்டு இறப்பதற்கு முன்பு இறுதியாக போன் செய்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்யும் பாலமுருகன் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அன்னப்பட்டுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கணவரை இழந்த அன்னப்பட்டுக்கும் தனக்கும் அறிமுகம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக இருந்து வந்தது. சம்பவத்தன்று சோளக்காட்டுக்கு அன்னப்பட்டுவை வரச் போனில் தகவல் அளித்தேன். அதன்படி அவர் அங்கு வந்தார். அங்கு இருவரும் தனிமையில் இருந்தோம். அதன் பிறகு அன்னப்பட்டுக்கும், எனக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. இது குறித்து அன்னப்பட்டு கேட்டார். அது குறித்து பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவரை சமாதானம் செய்தும், அவர் கேட்கவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த நான் அன்னப்பட்டுவை கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டேன்” என்றார். பாலமுருகன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.