கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி 27 வயது அமுதா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்வதற்கு அசகளத்தூர் என்ற ஊரில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு சென்றுள்ளார்.
அந்த மருந்தக உரிமையாளர் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு வயிற்றில் வளரும் கரு பெண் குழந்தை என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பெண் குழந்தையா? இனி பெண் குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்த அமுதா, அந்த மருந்தக உரிமையாளரிடம் கருக்கலைப்பு செய்வதற்கு ஆலோசனைக் கேட்டுள்ளார். அவர் தனது மருந்தகத்தில் இருந்து கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து சாப்பிடுங்கள் என்று கூற, அமுதாவும் அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்ட பிறகு, நிறாமணியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்த நிலையில் நேற்று காலை அவருக்கு கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதின் விளைவாக ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது.
இதனால் அமுதா மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அமுதாவை உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அமுதாவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேப்பூர் போலீசார் அமுதாவிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த அசகளத்தூர் மருந்தகத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் உள்ள ராமநத்தம் கிராமத்தில் மருந்தக உரிமையாளர் ஒருவர் ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து அதில் அந்தப் பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகரித்து அந்த பெண் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்தக உரிமையாளரை கைது செய்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வேப்பூர் அருகே அமுதா என்ற பெண் கருக்கலைப்பில் இறந்து போன சம்பவம் வேப்பூர் ஒரு பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.