வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூ.43.89 கோடி நிதியில் குடியாத்தம் கௌண்டன்ய ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் தாழையாத்த முதல் சேம்பள்ளி சாலை வரையிலான கௌண்டன்ய மகா நதியின் வலது கரையோரம் புதியதாக அமைக்கப்பட்ட சாலையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இவ்விழா முடிந்து அமைச்சர் துரைமுருகன் புறப்பட்ட நிலையில் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர் திடீரென மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் சென்று அவரின் கையைப் பிடித்து அழுதார்.
இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “எனது பெயர் விஜயலட்சுமி (43) குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை புது தெரு பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு கணவர் இல்லாத சூழலில் கௌண்டன்ய ஆற்றின் கரையோரம் வீடு கட்டி வசித்து வந்தோம். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாகக் கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு எங்களின் வீடுகளை இடித்து விட்டார்கள். பிறகு எங்களுக்கு வீடு ஒதுக்கித் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை வீடு, இடம் என எதுவும் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக 40 முறைக்கு மேல் அதிகாரிகளுக்கு மனு அளித்து விட்டேன் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஐந்து பெண் பிள்ளைகளை வைத்து வீட்டு வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். ஆண் துணை இல்லை. "எனக்கு ஆதார் அட்டை இருக்கிறது ஆனால் முகவரி இல்லை" அடிக்கடி வீட்டை மாற்றிக் கொண்டிருக்கிறேன். அண்டா, குண்டா தூக்கக் கூட எனக்கு ஆண் துணை இல்லை. நீங்கள் பிச்சை போடுவதாக நினைத்தாலும் சரி, வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனது புடவையால் கூடாரம் அமைத்துக் கொள்கிறேன் அரசு இடமாவது தயவு செய்து கொடுங்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலில் தினம் தினம் அவதிப்பட்டு வருகிறேன். இந்த செய்தியைப் பார்க்கும் வசதி படைத்தவர்கள் யாராவது கூட எனக்கு உதவலாம் நான் பிச்சை கேட்பதாகக் கூட நினைத்துக் கொள்ளுங்கள் என்னுடைய சூழல் அப்படி உள்ளது. நான் அரசின் எந்தவித நலத்திட்டத்தையும் கூட வாங்கவில்லை. எனக்கு கை, கால் இருக்கிறது என்னால் உழைக்க முடியும், உழைத்து என்னால் வாழ முடியும் தயவு செய்து எனக்கு அரசு இடம் கொடுத்தால் நல்லது” எனக் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்றியவர்களுக்கான இடம் ,வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகனும், கௌண்டன்ய மகாநதி ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட போது ஒரு சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு வழங்க வேண்டி உள்ளது. அது விரைவில் வழங்கப்படும் என்றார்.