‘நேர்மையின் விலை என்ன?’ என்று நேர்மையாளர்களிடமே பேரம் பேசும் காலம் இது. அரசுத்துறையிலோ அரசியலிலோ ஒருவர் நேர்மையைக் கடைப்பிடித்தால் பலவித சோதனைகளுக்கு ஆளாக நேரிடும். சிவகாசி மாநகராட்சியில் தன்னை ‘நேர்மையான கவுன்சிலர்’ என்று தொடர்ந்து அடையாளப்படுத்திவரும் 5-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் இந்திராதேவிக்கும் ஒரு சோதனை வந்தது.
7 மாதங்களுக்கு முன் 5-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் 11 பேர், தங்களது வீடுகளுக்கு தீர்வை செலுத்த மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளித்தனர். அந்த மனு மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு மனுவுக்கும் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதற்கு தீர்வுகாண, நேர்மையான கவுன்சிலர் இந்திராதேவி ஒரு காரியம் செய்தார். அந்த 11 பேரிடமும் ரூ.10 ஆயிரம் வீதம் வசூலித்து, மொத்த பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துடன் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மாநகராட்சி கூட்டத்தில் அந்தப் பணத்தைக் காட்டி, “கமிஷனரிடம் கொடுக்கலாம் என்றுதான் இந்த லஞ்சப்பணத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. என் வார்டு மக்கள் அளித்த மனுவுக்கான வேலையை முடித்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இந்தப் பணத்தைக் கொடுக்கப் போகிறேன்.” எனப் பேசி அந்த மாமன்றத்தை அதிரவைத்தார்.
இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி (திமுக) மேயர் சங்கீதாவிடம் நாம் பேசியபோது “சம்பந்தப்பட்ட செக்ஷன் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.
கவுன்சிலர் இந்திராதேவியின் நேர்மை குறித்து நம்மிடம் பேசிய கவுன்சிலர் ஒருவர் “முகநூல் பக்கத்திலும் கூட தன்னை ‘நேர்மையான கவுன்சிலர்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுத்துத்தானே இவரால் கவுன்சிலராக முடிந்தது. நேர்மையான கவுன்சிலர் என்று சொல்லிக்கொண்டு, மக்களிடமிருந்து லஞ்சப்பணத்தை பெற்று, மாமன்றம் வரைக்கும் கொண்டுவந்தது தான் நேர்மையோ? லஞ்சம் வாங்குவது குற்றம் என்றால், லஞ்சம் கொடுப்பதும் குற்றம்தானே? லஞ்சத்தை நியாயப்படுத்தவில்லை. அதேநேரத்தில், லஞ்சப்பணத்தை காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தி ‘பப்ளிசிட்டி’ தேடுவது எந்தவிதத்தில் சரி? லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கிறது. ஒரு புகார் மூலம் முடிந்துவிடக்கூடிய விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவதற்கு, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் இந்திராதேவியை பின்னால் இருந்து தூண்டிவிடுகிறார். ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்டப்பெயர் ஏற்படுத்துவதுதான் நேர்மையோ?” என்றார் ஆதங்கத்துடன்.
நேர்மை என்ற உயரிய அறத்தைக் கடைப்பிடிப்பவர்களிடம் இயல்பாகவே ஒரு கம்பீரம் வெளிப்படும்.