Skip to main content

“திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதினம் இல்லை..” - கி.வீரமணி

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

"Without the Dravidian movement, there would be no Adinam." - K. Veeramani

 

திராவிடர் கழகம் சார்பில் திருச்சி பெரியார் மாளிகையில் மாநில அளவிலான மகளிர் அணி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திராவிடர் கழகம் இயக்கத்தின் தலைவர் வீரமணி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், தி.க.வில் மகளிர் அணியின் பங்களிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்துப் பேசினார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி.வீரமணி, “திராவிட மாடல் ஆட்சி என்பது சுயமரியாதை,சமூக நல்லிணக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும்‌. இருப்பினும் மனித குலத்தின் சரிபகுதியாக இருக்கும் பெண்களின் உரிமையை அடைய வேண்டும் என தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார். ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற பிரிவு பேதம் இருக்க கூடாது என்று சொல்லி பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் நடத்தினார்.

 

இந்த மாநாட்டில் சொத்துரிமை, படிப்புரிமை, உத்யோக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்ணல் அம்பேத்கர் பிரதமர் நேரு காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த போதும் கூட இந்து சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் நேரத்தில் ஒரு சில உரிமைகளுக்கு மட்டும் தான் சனாதானிகள் இடம் கொடுத்தனர். பிரதமர் நேருவின் கருத்துக்களை கூட எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர். பெண்களுக்கு சொத்துரிமை என்ற அம்பேத்கரின் சட்டத்தை இந்து சட்ட மசோதாவில் சனாதானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


பின்னர் சோனியா காந்தி தலைமையில், மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது திமுக அங்கம் வகித்த போது அந்த UPA கூட்டணியில் சொத்துரிமை சட்டம் நிறைவேறியது. பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை திராவிட மாடல் ஆட்சி உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுத்தியது பாராட்டுக்குரியது. அனைவருக்கும் அனைத்தும், பிறபொக்கும் எல்லா உயிருக்கும் என்பது தான் திராவிட மாடல் அதற்கு நேர் எதிரானது தான் ஆரிய மாடல்.


ஜாதி இருக்க வேண்டும், பெண்கள் அடுப்பறையில் இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். மாடல் இதை மாற்றுவது தான் திராவிட மாடல். 8-ஆண்டுகள் மோடி ஆட்சியிலும், அதற்க்கு முந்தைய ஆட்சியிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டம் கிடப்பில் உள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் 50% இட ஒதுக்கீடு திமுக அரசு வழங்கியுள்ளது. கல்லூரி படிக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல்.


திராவிட மாடலை எதிர்த்தால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதினம் இல்லை. ஏனெனில் சூத்திரர்கள் சந்நியாசியாக முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. அந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்க முடியாது. சந்நியாசி, துறவியர்கள் எல்லாம் பேச முடியாது. சங்கராச்சாரி மட்டும் தான் இதிலிருந்து தப்புவார். உயர்சாதி மட்டும் தான் இருக்கும்.


அதிமுக, பாஜக இடையே யார் ஆளும் கட்சியாக வர வேண்டும் என்ற சண்டை இல்லை; யார் எதிர்க்கட்சியாக வருவது என்பதில் தான் சண்டை. முதல் எதிர்கட்சியா, இரண்டாவது எதிர்க்கட்சியா என்பதில் தான் சண்டை. இதன் மூலம் அவர்கள் எப்போதும் ஆளும் கட்சியாக வர முடியாது என்பது தெரிகிறது” என்றார். 


பாஜக எதிர்க்கும் போது திமுக பின் வாங்குகிறதா எனச் செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு பதில் அளித்த அவர், “திமுக ஒருபோதும் பின்வாங்காது. புலி பின்வாங்குவது பாய்வதற்காகவே என்பது புலியை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். புலியை பற்றி தெரியாதவர்களுக்கு புரியாது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் மும்பையில் கைது; தமிழக போலீசார் அதிரடி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Mayiladuthurai District BJP Leader arrested in Mumbai by Tn police 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளது. நான் இதுவரையில் தலைமறைவாகவில்லை. முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் அளிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் தலைமறைவாக இருந்த அகோரத்தை தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

Next Story

“மோடியின் மிரட்டல் எல்லாம் செல்லுபடியாகாது” - அமைச்சர் அன்பில் மகேஷ் விளாசல்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Modi's threats are not valid Minister Anbil Mahesh 

திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு கலைஞரின் சிலையைத் திறந்து வைத்தார்.

முன்னதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. அதனால் தான் பிரதமர் மோடி இப்போது தமிழகத்திற்கு அவ்வப்போது வந்து சென்று கொண்டிருக்கிறார். புயல், வெள்ளம் தாக்கியபோது, மீனவர்கள் இறந்தபோது, நீட் தேர்வால் 22 மாணவ - மாணவிகள் இறந்தபோது வராத மோடி ஏன் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் வராத மோடி இப்படி எதற்கும் வராத மோடி. இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றால் தேர்தல் வந்துவிட்டது என்று அர்த்தம். அழிப்பேன், ஒழிப்பேன் என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் முதல்வர் எழுதிய கடிதத்தில் ஆளும் கட்சியாக இருந்தபோது ஏதும் செய்யவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போதாவது ஏதாவது செய்வீர்களாக என்று நாகரீகமாக கேட்டிருந்தார். மோடி மிரட்டினால் அடிபணிய இது அ.தி.மு.க. அல்ல. அண்ணாவின் தி.மு.க., அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு. மோடியின் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது” என்று கூறினார்.

கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியதாவது, “இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. காஷ்மீர், டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு இப்படி இந்தியா கூட்டணி அமைந்துவிட்டது. தமிழ்நாடு தான் இதற்கு வழி காட்டுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி வரப்போகிறது” என்று கூறினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர தி.மு.க. செயலாளர் மதிவாணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட தி.மு.க பொருளாளர் குணசேகரன், மணப்பாறை நகர கழகச் செயலாளர் மு.மா. செல்வம், மணப்பாறை நகர மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், மணப்பாறை ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, மணப்பாறை ஒன்றிய குழு தலைவர் அமிர்தவல்லி ராமசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.