நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலி சான்றிதழைச் சமர்ப்பித்து தேர்தலில் வெற்றிபெற்றது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தோலப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கல்பனா சுரேஷ் என்ற பெண் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் கல்பனா சுரேஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அவர் போலி சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட மோசடி புகாரின் மீது மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் குழு ஒன்று நடத்திய விசாரணையில் கல்பனா சுரேஷ் போலி சான்றிதழைக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது ஊர்ஜிதமானது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான பரிந்துரையை மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அவருக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்த அதிகாரி மீது எப்பொழுது நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற கேள்வியும் அங்கு எழுந்துள்ளது.