இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்பிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பீகார் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் உமேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ள நிலையில் நிதீஷ் குமாரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடப்புறம் வேண்டும் என நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எத்தனை இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக இந்த முக்கிய ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ரயில்வே துறை, வேளாண் துறை போன்ற சில துறைகள் எங்களுடைய கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார், பிற கட்சிகளின் முடிவு என்ன என்பதைப் பொறுத்து ஐக்கிய ஜனதா தளத்திற்கு இலாகாக்கள் ஒதுக்குவதாக பாஜக தலைமைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தன் கட்சி எம்பிகளுடன் நிதீஷ் ஆலோசனை செய்து வருகிறார்.