Skip to main content

இரை தேடி வந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழப்பு

 

Wild elephant passed away electric shock in paddy field

 

நெல்லை மாவட்டத்தின் கல்லிடைக்குறிச்சியை ஒட்டிய மணிமுத்தாறு மலைவனப்பகுதியில் வசித்து வருகிற யானை, கரடி, மிளா, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீருக்காகவும், இரை தேடியும், சில நேரங்களில் பாதை தவறியும், மலைப் பக்கமுள்ள கிராமங்களில் புகுந்துவிடுவதுண்டு. கடந்த சில தினங்களுக்கு முன்பு தரையிறங்கிய ஆண் யானை ஒன்று மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் கிராமங்களில் இரை தேடி அலைந்திருக்கிறது.

 

இந்த நிலையில் அந்த யானை நேற்று காலை சிங்கம்பட்டி பீட் -2 பிரிவில் உலுப்படிப்பாறை பீக்கம்பள்ளம் எனுமிடத்திலுள்ள பனங்காட்டிற்குள் புகுந்திருக்கிறது. அங்குள்ள பெரிய பனை மரத்தின் குருத்தோலைகளைத் தின்னும் பொருட்டு பனைமரத்தை முட்டி வேரோடு சாய்க்க முயன்றிருக்கிறது. ஆனால் எதிர்பாராத வகையில் பனை மரம் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது சாய, இதில் திடீரென்று மின் கம்பி அறுந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே யானை துடி துடித்துப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

 

தகவல் சென்று, களக்காடு முண்டன்துறை இணை இயக்குநர் செண்பகப்பிரியா, வனத்துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். புலிகள் காப்பக டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பிரேதப் பரிசோதனை நடத்தினர். பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பெரிய குழி தோண்டி­ முறைப்படி யானையைப் புதைத்தனர். இறந்த யானை சுமார் 40 முதல் 45 வயதிருக்கலாம் என்கிறனர் வனத்துறையினர். உணவுக்காக வந்த மிகப் பெரிய யானை மின்சாரம் தாக்கி பரிதாபமாக மடிந்தது சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !